எழுத்தாளர் சுஜாதா
அவர்களிடம் இரவல் வாங்கி சில ஆரம்ப வரிகள்…
எத்தனை முறை பார்த்தாலும்
சலிக்காத மூன்று உண்டு…
- கடல்…
- யானை… மற்றும்
- ரயில் வண்டி..!!
நன்றி – திரு சுஜாதா.
ஆம் .. ரயிலே… உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை…
(NB: ரயில் என்றால், சென்னை பம்பாய் மாமாநகரங்களில், தலை எது வால் எது என்று தெரியாமல் மண்ணுளி பாம்பாய் நெளியும் லோக்கல் ட்ரெயின்கள் சுஜாதாவின் ரயில்களில் சேர்த்தியில்லை என்பது என் எண்ணம்!!)

ஆம் .. ரயிலில் பயணிப்பது
ஒரு சுகமென்றால்… தடதடத்து ஓடும் ரயிலை பார்த்து ரசிப்பது இன்னொரு சுகம்..
ஆம்.. பக்கத்திலிருந்தும் தூரத்தே இருந்தும் பார்த்து ரசிப்பது இன்னொரு ரகம்!!
ரயிலோ ரயில் தடமோ இல்லாத ஊரில் (கிருஷ்ணகிரி… இன்று வரை எந்த ரயிலும் கிருஷ்ணகிரியை பார்த்ததில்லை.. கிருஷ்ணகிரியும் எந்த ரயிலையும் பார்க்கவில்லை!!) பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்கும்
ரயிலிடம் அப்படி ஓர் ஈர்ப்பு!
ஓடும் ரயிலில் குறிப்பாக கூட்ஸ் வண்டியில் பெட்டிகளை, எண்ணெய் டாங்குகளை எண்ணுவது..
ஓடும் ரயிலில் இருந்து… நதி, மலை, பாலம், அதே ரயில் வளைந்து நெளிந்து செல்லும் போது என்று ஃபோட்டோ எடுப்பது… இன்றும் தொடரும் சின்ன சின்ன ஆசைகள் ஓராயிரம்!!!
ரயிலின் முதல் அறிமுகம்.. எழுபதுகளில்… பள்ளி நாட்களின் மே மாத விடுமுறைக்கு பாட்டி ஊர் செல்லும் போது மதுரை – நெல்லை – திருசெந்தூர் என்று கரி இஞ்ஜின் (Steam Engine) ரயிலில் பயணம்..

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் கரி துகள் கண்ணில் விழுந்து கண்கள் கரிக்கும் என்னும் தந்தையின் எச்சரிப்புக்குரல் காதுகளில் ஒலிக்கிறது..
இன்றும் சதாப்தி, தேஜஸ், துரந்தோ ரயில் பயணங்களிலும்… எலக்ட்ரிக் எஞ்ஜின்
வந்த பின்னும்..!!
வடக்கே “குப்பம் ரயிலடி” கிழக்கே “திருப்பத்தூர்” தெற்கே “தர்மபுரி ரயிலடி” மேற்கே “ஓசூர் ரயிலடி” என எப்பக்கதிலும நாற்பது கிமீ தள்ளிதான் ரயிலும் ரயில் தடமும் கிருஷணகிரிக்கு!!
ஆண்டுக்கு ஒருமுறை அன்றைய ஆந்திராவின் “குப்பம்” ரயில் நிலையத்திற்கு (ஆம்.. “சந்திர பாபு நாயுடு” & எங்கள் காலேஜ் பண்ணையார் புகழ் குப்பம் தான்!!) அம்மாவின் பள்ளி பிள்ளைகளுடன் “சுற்றுலாவில்” ரயிலின் “விசேஷ தரிசனம்” கண்டிப்பாக உண்டு..!!
ஆராதனாவின் மேரி சப்னோக்கே ராணி தொடங்கி…
ஒரு தலை ராகம்…
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்..
அந்தி நேரம் தென்றல் காற்று…
சிக்கு புக்கு ரயிலே…
சைய சைய… என்று திரும்ப திரும்ப கேட்க / பார்க்க வைக்கும், ரயிலோடும் தடதடக்கும் ரயிலின் தாள இசையுடனும் தொடர்புடைய பாடல்கள் / படங்களின் வெற்றி சொல்வது ஒன்றேதான்…
ஆம் .. ஆயிரம் முறை பார்த்தாலும் நான் விரும்புவது ஆயிரத்தோராவது முறை பார்க்கத்தான்…
காதலன் காதலியை பார்த்து சொல்ல வேண்டிய வசனத்தை தன்னிடம் சொல்ல வைத்தது இந்த ரயில் மீதான மோகம்தான் போல!!
